Sunday, 8 May 2011

.....ரா....ரா ..ஜா......!!!!!!!!!!






 
"கல்யாணம்கிற பேர்ல எப்படிடா ஷங்கர் , முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணு கூட படுக்க ரெடி ஆயுடுறீங்க .."

இப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை ... கொஞ்சம் அதிர்ந்து போனேன்... இதே மாதிரி வேறு யாரவது கேட்டிருந்தால் .... நடப்பதே வேறு... ஆனால் கேட்டது ராஜா- வாயிற்றே.. .. அதிர்வில் கொஞ்சமும் சலனமற்று நின்றேன் ,,..

ராஜா....... அநேகமாக உங்கள் எல்லோருக்கும்  இது சிநேகமான பெயர்தான்... உங்கள் பக்கத்து  வீட்டிலோ , அண்ணனோ ,தம்பியோ .... உங்கள் வீட்டில் உங்களை அழைக்கப்படும் பெயராகவோ .....உங்கள் குடும்பம் சார்ந்த பெயராகவோ , குடும்பம் சாராத நட்பின் பெயராகவோ இருக்கலாம்.தேசிய விலங்கு, தேசிய பறவை மாதிரி ,... இந்தியாவெங்கும் அங்கீகரிக்க படாத தேசிய பெயர் ராஜா- வாகத்தான் இருக்கும் ... நீட்டி முழக்காமல் ... ஒரே வரியில் சொன்னால்...... இதோ இந்த வாழ்க்கை ராஜா கொடுத்தது... அப்படியிருக்கும் பட்சத்தில் என்னால் அவனை எதிர்த்து எதுவும் பேச முடியாது....

ராஜா --- எனக்கு டிப்ளோமா படிக்கும் காலங்களில்தான்   நன்கு பரிச்சயம்  ஆனான் ...... தினமும் பக்கத்து ஊருக்கு ரயிலில் பயணம்... ரயில் நிலையத்தில் இருந்து POLYTECHNIC ஒரு நான்கு கிலோமீட்டர் இருக்கும் ,... களைப்பு தெரியமால் நடக்க , நாங்கள் பேசி கொண்டே செல்வோம்..
நிறைய பேசுவான் ராஜா .... உலகத்தின் அத்தனை விஷயங்களையும் தன் விரல் நுனிக்குள் வைத்துக் கொள்ள ஆசைப்படுவான். 
திடீரென " உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ஷங்கர் " , நம்ம தமிழ்நாட்டு பிளேயர் ராபின் சிங்க்-க்கு தமிழ் தெரியாது என்பான் ,,, இதெல்லாம் எங்கு புடிப்பான் என்றும் தெரியாது ,,, எங்கு படிப்பான் என்றும் தெரியாது... ஆனால் அவன் பேச பேச நாம் கேட்டு கொண்டே இருக்கலாம்.  உனக்கு  சே குவாரா தெரியுமா ! என  புது புது விஷயங்களை சொல்லி கொண்டே இருப்பான்...

நான் , நேற்றைய பற்றிய சிந்தனையும் , நாளைய பற்றிய கவலையும் இல்லாத மனிதன்... ஆற்றில் விழும்  இலை மாதிரி...வாழ்க்கையை கால ஓட்டத்தின் போக்குக்கு விட்டுவிடுபவன்,,,, ஆனால் ,,, அவன் ...நேற்றை மறக்க கூடாது ... என்பான் .... நாம் நேற்றில் அடைந்த வலிகள் தான் .... சவாலான நாளையை சமாளிக்க உதவும் உந்து சக்தி... என்பான்... ஒரு VISION ஒரு MISSION இல்லாத  மனிதன் ... ஜடம் என்பான்,. அவன் மொழி புரியவில்லை என்றாலும் ,... புடிக்கும்.. வரலாறை படிப்பதில் ஆர்வம் காட்டுவான் ...  மறைந்தால் ஒரு வரலாறாக மறைய வேண்டும் என்பான்...கிட்டதட்ட சிவப்பு சிந்தனை காரன்... (அதாங்க கம்யூனிஸ்ட்) ...

கிளாஸ் ரூம்-ல்  , இன்னிக்கு கயல்விழி என்ன டிரஸ்-ல் வந்திருக்கு என எட்டி பார்த்தால் திட்டுவான்... இந்திரா மேடம் ... திரும்பி நின்று போர்டு-ல் எழுதும் போது... கொஞ்சம் கவனம் சிதறினாலும் ...பார்வை எங்கோ போகுது பார் என அதட்டுவான்... மனிதனுக்கு கட்டுபாடு  மிக முக்கியம் என்பான்.  அறந்தாங்கி சுபாவில் , அருமையான பிட்டு  படம் ஓடுதுடா என்றால் .... அந்த நேரத்தை செந்திலோடு " சன் கம்ப்யூட்டர்-ல் " செலவு செய் ... உபயோகமாக  போகும் என்பான்... ஜோதி பாசு ரூமுக்கு போனால் , பலான புக் படிக்கலாம் என்றால் ,, TYPE WRITTING போ , பின்னால் உதவும் .. என்பான்...

எனக்கும் , இவனுக்கும் ஒரே வயதுதான் ஆகிறது ,,,, பிறந்தது கூட ,. ஒரே வருடம் , ஒரே மாதம்... அப்படியிருக்க இவன் சிந்தனைகள் மட்டும் ஏன் இவ்ளோ முதிர்ச்சியாய் என பல தடவை ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்...  
16 வயதில் , 60 வயதுக்குரிய  பக்குவத்தில் நடந்து கொள்வான்.

கடைசியாய் , FIRST CLASS WITH HONOURS   என்று டிப்ளோமா வாங்கியபோது , இந்த பெருமையெல்லாம் ராஜாவுக்குதான் என்று தோன்றியது. 
இந்தளவுக்கு மொபைல் , இன்டர்நெட்... வளர்ச்சி அடையாத அந்த காலத்தில்(2000 ) , டிப்ளோமாவுக்கு பிறகு சக மாணவர்களை சந்திக்க முடியாமல் போனது....கொஞ்சம் நஞ்சம் இருந்த ரெங்கராஜன்  தொடர்பும் , பிறிதொரு நாளில் அறுந்து போனது...

காலபோக்கில் ,SURVIVAL என்ற கால்பந்து வீரன் , ஷங்கர் என்ற இந்த பந்தை , வேலை என்ற கோல் போஸ்ட்டை நோக்கி உதைக்க , பறந்து வந்து சென்னை என்ற கிரௌண்ட்-ல் விழுந்தேன்....சென்னை என்ற உலகம் பிரமாண்டமாய் என் முன் நின்றது,..கிட்டதட்ட எட்டு மாதம்  அலைச்சல் ,.... ம்ஹ்ஹூம் .... எங்கும் வேலை கிடைத்த பாடில்லை... எல்லாம் நம்ம அண்ணன் பின்லேடன் புண்ணியம்தாம்... அவர் TWIN TOWERS-க்கு  வைத்த குறி ,,.. எங்களை மாதிரி வேலை தேடி அலைபவர்களின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி விட... ரொம்பவும் வெறுத்து விரக்தியின் உச்சத்தின் இருந்த கால கட்டம் ... கடைசியாய் சௌகார்பேட்டை யில் ஒருவன்  வேலை தருகிறேன் ,,, ஆனால் செக்யூரிட்டி-க்கு உன் CERTIFICATES  வேணும் என்று கேட்க ...
CERTIFICATES - தானே இந்தா! எடுத்துக்க என்று .. என் 18 வருட கல்வி உழைப்பை அவனிடம் அளித்தேன்..(Employment Card   , ஜாதி சான்றிதழ், தமிழக தமிழாசிரியர் கழகம் நற்சான்றிதழ் உட்பட )...  விளைவு ,.,.,, அவன் திடீரென தன் முகம் மாற்றி வில்லனாக சிரித்தான்,, எஸ் ,,,, அதோ... அங்கேதான்..என்னுடைய 19 வருட வாழ்க்கை ,, ஒரு கணம் நின்று துடித்தது...

செந்தில்குமரன் நான் ரொம்ப அவரச பட்டு விட்டதாக வருந்தினான் , அவனின்  அறிவுரையின் பேரில்  certificates -ஐ திருப்பி கேட்டபோது ஒரு பதில் வந்தது ... 
"ஆஆ  அதுவா , நாங்க எங்க HEAD OFFICE - க்கு   அனுப்புச்சுட்டோம் ,,, ஒரு வருஷம் கழிச்சுதான் திரும்பி வரும் என்று... " ...

அவரசப்பட்டு விட்ட குற்ற உணர்வு மேலிட ,,, செய்வறியாது , சௌகார்பேட்-லிருந்து .. மெரினா பீச்சுக்கு  நடந்தே வந்தேன்...மொத்தமும் சூன்யமாகி விட்டது  வாழ்க்கை ... நடந்த களைப்பில் , எம் ஜி ஆர் சமாதி அருகிலிருந்த புல் தரையில் சரிந்து அமர்ந்தேன் ... வெயிலில் கடற்கரை வெறிச்சோடி இருந்தது...என் நிலைமை மாதிரி....

இது கமாவா ! இல்லை முற்றுப்புள்ளியா ! என எதுவும் புரியாமல்,
அழுகை கண்களிலும்  ,, தோற்ற உணர்வு நெஞ்சிலும் அடைக்க ,,... அப்படியே தூங்கிப்போனேன் .. திடீரென கண் விழித்து பார்த்த போது , கொஞ்சம் அதிர்ச்சி தான் ,, காரணம் ...  என்னை மாதிரி நூற்று கணக்கான மனிதர்கள் உறங்கி கொண்டிருந்தார்கள்.அந்த புல் தரையில் .. இத்தனை பேரும் நம்மை போல் வாழ்க்கை தொலைத்தவர்களா என பிரமித்தேன் ... வெறுங்கையோடு ஊருக்கு திரும்பி போக முடியாது... வீட்டில் என்ன சொல்வது... என வழி தெரியாமல் நின்ற போது... கடல் அன்னை , அலை என்ற தன் கைகளை காட்டி , பிரமாண்டமாய் அழைத்தது... வா நான் உனக்கு ஒரு நிரந்தர வழி சொல்கிறேன்  என்று  . போ என இடது காலும் ,, போகாதே என வலது காலும் மன்றாடின.. கடற்கரையில் மனிதர்கள் நடமாட்டம் தெரிய ஆரம்பித்திருந்தது  , கடற்கரை நோக்கி மெல்ல நடந்தேன் ... பசி களைப்பில் , மணலோடு மல்லுக்கட்டி நடக்க முடியாமல் ... தொப்பென்று ஓர் இடத்தில் உட்கார்ந்தேன் ...

திடீரென என் தோள் மீது ஒரு கை விழ , சுதாரித்து நிமிர்ந்த போது ... என் கண்களை என்னால்  நம்பவே முடிய வில்லை ... ஆம் ... ராஜா ,ராஜாவேதான் ... இவன் இங்கு என்ன செய்கிறான் ,, என்ன செய்வான் ,,, நம்மை போல வேலை தேடி அலைந்து கொண்டிருப்பான்...
அதே பிரகாசமான முகம் .... தாயை தொலைத்து விட்ட குழந்தை ,, திரும்ப தாயை காண நேர்ந்தால் ... அழுவதா ,,, சிரிப்பதா ,.,.. என குழப்பமான மனநிலையில்... வீறிட்டு அழுமே ... அப்படி ஒரு நிலைமை அன்று எனக்கும் ... கொஞ்ச நேரம் ஆறுதல் கூறியவன் ...
இங்கே எல்லா பிரச்சினைக்கும் ஒரு SOLUTION   இருக்கு ஷங்கர்... அத தேடி கண்டு பிடிக்கணும் ... அதான் நம்ம வேலை ... இப்படி உடைஞ்சி போயிட்டா,,, எல்லாம் சரியாயிடுமா என்ன!  என பேச ஆரம்பித்தான்...ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் போல , கொஞ்சம் நேரத்தில் பிரகாசமானது ... என் மனது,, ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாது ... CERTIFICATES -ஐ திரும்ப பெற ,மிக பெரிய திட்டம் ஒன்றையும் வகுத்து கொடுத்தான்,.. 
கிடைக்குமா... என்றேன்,... கிடைக்கும் தைரியமா போ என்றான்.... அவன் சொன்னது போல , ஒரு வாரம்  இடைவெளி விட்டு .. அவன் திட்டத்தை முழுமையாய் செயல்படுத்தினேன்.. CERTIFICATES - என் கையில்... அதனை  தொடர்ந்து , அத்தனை முயற்சிகளும் அவன் உத்தரவுபடி தான் நடந்தது, அடிக்கடி என் ரூமுக்கு வந்து அறிவுரைகள் வழங்கி விட்டு செல்வான்.... அறை நண்பன் ரெங்கராஜனிடம்    இவன் பற்றி சொல்லலாம் என்றால் ..அவன் வரும் நேரமெல்லாம் , ரெங்கராஜன் , தான் எழுதி கொண்டிருக்கும் HARDWARE ENGINEER புத்தகம் சம்பந்தமாக வெளியே சென்று விடுவான்.

மீண்டும் ஒருமுறை , SURVIVAL என்ற கால்பந்து வீரன் , ஷங்கர் என்ற பந்தை . பணத்தேவை என்ற கோல் போஸ்டை நோக்கி உதைக்க , RWANDA என்ற கிரௌண்டில் வந்து விழுந்தேன்,... 
ஒரு வருடம் எல்லாம் சரியாய் போய் கொண்டிருந்தது...நமக்கு  எந்த சம்பந்தமும் இல்லாத மனிதர்களின் வளர்ச்சியை பார்த்து பொறமை கொள்வதும் , பொறுமுவதுமான மனிதர்கள் இந்த பூகோளத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்... அப்படியான தொந்தரவுகளின் தொந்தரவு பொறுக்க முடியமால் ,ஒரு தடவை வெடித்துச்  சிதறிவிட்டேன்...  
இயலாமையின் போது  மனம் ஆதரவையும் ஆறுதலையும் தேடுவது இயல்பு.. அப்படிதான் செந்தில் கணேஷை பார்க்கலாம் என சென்றேன்... அவன்  வீட்டிலும் இல்லை... மொபைல் ஆப் ...... மீட்டிங்-ல் இருப்பான் ...வெகு நேரம் , அவன் வீட்டு வாசல் நின்றவாறு ,,, வானத்தை வெறித்து பார்த்தேன்.. என்ன மாதிரியான உலகம் இது..! மனிதர்கள் இவ்ளோ குருரமாக இருக்கிறார்களே... ! நான் இவர்களுக்கு என்ன தீங்கு செய்தேன் ,,,இவர்களை பற்றி நான் யோசிப்பது கூட கிடையாது... ஆனால் நம்மையே குறி வைக்கிறார்களே... ஒருவன் தனித்துவத்தோடு வாழ ஆசைபடுவது தவறா... மனம் பலவாறாக தவித்தது.. இறுதியில்,  LEAVING RWANDA   என தீர்க்கமான  முடிவெடுத்து ... வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.. மறுபடியும்  அவசரப் படுகிறோமோ என மனது குழம்பியது ,,.,, 
குறுகிய மன மனிதர்களிடையே வாழ்வதை விட செல்லலாம் என தோன்றியது,யோசித்தவாறே நடந்த என்னை கடந்து செல்ல முயன்றவர் , திடிரென என்னை தடுத்து நிறுத்தினார்..
ஒட்டு மொத்த அதிர்ச்சியும் சந்தோசமும் ஒருங்கே நடந்தேறியது அங்கே......  ஆஆம்................ ராஜா.....வே....தான் ,,,
நீ இங்கே என்ன பண்றே ! என நான் கேட்க எத்தனிப்பதற்குள் .... அவனே  இந்த கேள்வியை கேட்டான்...
எல்லாவற்றையும் கேட்டு முடித்தவன் , கட கட வென சிரித்தான்.. இன்னமும் நீ மனதளவில் வளரவே இல்லை ஷங்கர்.... என்றவன்...
நீ சொல்லும் அத்தனை பிரச்சினைகளும் , இந்த உலகத்தின் அத்தனை மூலைகளிலும் இருக்கிறது... நீ எங்கு ஓடுவாய் என்றான் !
அவன் எனக்கு சொன்ன பழைய கதைகளை நினைவு கூர்ந்தான்..

வில்வித்தையின் போது , துரோணர் தன் மாணவர்களிடம் , ஒரு மரத்தை காட்டி ,உங்களுக்கு என்ன தெரிகிறது என்றாராம்.. அனைவரும் ஆளுக்கு ஒரு பதிலைச் சொல்ல , அர்ஜுனன் மட்டும் , எனக்கு பறவையின் கண்கள் தான் தெரிகிறது.. என்றானாம்...
அந்த மாதிரி தான் ஷங்கர் ,,,, நமக்கு நம் டார்கெட் மட்டும் தான் கண்ணுக்கு தெரிய வேண்டும் என்றான், 

அதே மாதிரி இன்னொரு கதை..
வழக்கம் போல எமதர்மன்  , தன் தின கணக்கு வழக்குகளை ,பெருமாளிடம் ஒப்படைப்பதற்காக .. வைகுண்டம் வந்தார்....அப்பொழுது வைகுண்டம் வாசலில் எலி ஒன்று விளையாடி கொண்டிருக்க , நீ இங்குதான் இருக்கியா என தன் கர்ஜனை  குரலில் கேட்டு விட்டு உள்ளே சென்று விட்டார் ! அய்யய்யோ கேட்டது எமதர்மனாயிற்றே ,,, நம்மை கொல்லாமல் விடமாட்டார் என பயந்த எலி ... வைகுண்டம் வாசலில் நின்ற , பெருமாளின் வாகனம் கருடனிடம் ,,,, அழுது புலம்ப ,,,, அதை காப்பாற்றுவதாக உறுதி அளித்த கருடன் ,,,,தன் தோள் மேல் தூக்கி கொண்டு ,,,, ஏழு மலை,கடல் தாண்டி ,,, ஒரு பாறையின் அடியின் , பத்திரமாக வைத்து விட்டு வந்து விட்டதாம். வைகுண்டத்தில் இருந்து வெளியே வந்த எமதர்மன்  எலியை காணமல் அங்கும் இங்கும் தேட , அதை பார்த்து சிரித்து கருடன், என்ன எமதர்மா  ! எலியைதானே தேடுகிறீர் ! நீங்கள் திரும்பி வரும்போது அதை கொன்று விடுவீர்கள் என தெரியும் ! அதான் ஏழு கடல், மலை தாண்டி, பாறையின் அடியின் பத்திரமாக வைத்து விட்டேன் . என பெருமிதமாக சொன்னதாம்.இப்போது , குபீரென சிரித்த எமதர்மன் ! அதனுடைய விதிப்படி ! இன்று அந்த எலி , ஒரு பாறையில் நசுங்கி சாக வேண்டும் ! நான்கூட விதி தவறோ என நினைத்தேன் ! என்றும் மீண்டும் சிரித்தவாறே சென்றாராம் ...

அந்த மாதிரி தான் , நாம எங்க ஓடினாலும் , பிரச்சினை பிரச்சினை தான்,, இங்கே இவர்கள் ! அங்கே வேறு மனிதர்கள் அவ்ளோதான்.!
அவன் பேச பேச அவனையே பார்த்து கொண்டிருந்தேன் ,, இவன் மட்டும் எப்படி ஒரு COMPLETE POSITIVE THINKING PACKAGE- ஆக இருக்கிறான்  என புரியவில்லை.. 

அப்புறம் அடிக்கடி ரூமுக்கு வர ஆரம்பித்தான் .. ஒன்றாக படம் பார்ப்போம் ,, நான் அவனுக்கு TERMINAL பார்க்க கொடுத்தேன் ,,, அவன் என்னை LIFE IS BEAUTIFUL   பார்க்க சொன்னான் ,, ஹிட்லர் பிடிப்பவனுக்கு ! எப்படி LIFE IS BEAUTIFUL படம் பிடிக்கிறது என்று கேட்டால் ! எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருந்து விடுவான்,,

ஒரு சனிக்கிழமை மதிய வேளையில் , கொஞ்சம் தூங்கலாம் என கண் அயர்ந்தேன்,,, கனவில் சினேகாவோ! அனுஷ்காவோ    ! யார் என சரியாய் தெரியவில்லை ... அவசரத்துக்கு யாராக  இருந்தால்  என்னவாம்! என யோசித்து கொண்டே அருகில் செல்ல முயன்ற போது ,.,
தட தட வென யாரோ தட்டி எழுப்பியது மாதிரி இருக்க! என்னமோ ஏதோ  என்று ! அடித்து பிடித்து எழுந்தால் ,,, வேறு யாருமில்லை நம்ம ராஜா தான் ,, சனிக்கிழமை மதியம் லீவ் என்றால் நேராக என் ரூமுக்கு வந்து விடுகிறான் ..பாவிப்பயல்.. வந்தவன் கொஞ்ச நேரம் கழித்து  வந்துருக்க கூடாதா ! ....

என்ன ஷங்கர் தூங்குறியா ! என்றான்,,,, உலகத்திலேயே  தூங்குறவனை எழுப்பி தூங்குறியா!! என கேட்ட முதல் மனிதன் நீதான் என்றேன் ,

என்னடா விஷயம் என அழுத்து கொண்டேன்,,, ஒண்ணுமில்ல ! நம்ம பூமி அந்தரத்துல தொங்கிகிட்டு இருக்கு  கரெக்ட்-தானே என்றான்... பூமி மட்டுமா ! நாம எல்லாருமே empty space -ல தொங்கிண்டுதான் இருக்கோம் ... இதை நீதானடா!  எனக்கே சொன்னது  ! என்றேன். 
ஒருவேளை இந்த பூமி திடீர்ன்னு விழுந்தா!!  எங்கடா  போய் விழும் ... என்றான் ,... எனக்கு அழுவதா சிரிப்பதா என தெரியாமல் , ரெண்டும்  கெட்டான் மனநிலையில் இருந்தேன்...கனவை கலைத்து விட்ட கடுப்பில் ,,, உன் தலை மேலதாண்டா!!  விழும் என்றேன்,,

... இப்படி சில நேரம் அவன் விசித்திரமாகவும்  நடந்து கொள்வான்,, என்ஜாய் பண்ண வேண்டிய 29 வயதில் , இப்படி பூகோளத்தையும் ,  வரலாறையும் பற்றி பேசி கொண்டு இருக்கிறானே  என எனக்கும் வருத்தம் தான்,,,

இந்த மாதிரியான  ஒருநாளில்தான் ! எனக்கு எங்க அம்மா பெண் பார்த்திருப்பதாகவும் , பெண்ணின் ஊர் திருச்சி ஸ்ரீரங்கம்  என்றும் சந்தோசமாக ராஜாவிடம் கூறினேன், 

"கல்யாணம்கிற பேர்ல எப்படிடா ஷங்கர் , முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணு கூட படுக்க ரெடி ஆயுடுறீங்க .கல்யாணம்கிறது என்ன ! 
நீங்க ஒரு பொண்ணு கூட நிரந்தரமா படுக்கறதுக்கு இந்த SOCIETY கொடுக்குற அங்கீகாரமா  ..."  என்றான் ..
 
 இப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை ... கொஞ்சம் அதிர்ந்து போனேன்... இதே மாதிரி வேறு யாரவது கேட்டிருந்தால் .... நடப்பதே வேறு... ஆனால் கேட்டது ராஜா- வாயிற்றே.. .. அதிர்வில் கொஞ்சமும் சலனமற்று நின்றேன் ,,..
 

அவனை பற்றி எனக்கு நன்கு தெரிந்திருந்தாலும் ! இந்த மாதிரியான சுளீர் வார்த்தைகள் ! என்னை காயப்படுத்தவே செய்தன..ஒரு மங்களகரமான  விஷயத்தை, இந்த மாதிரி ஒரு இயந்திர மனிதனிடம் கூறியது நம் தவறு ,      என என்னை நானே நொந்து கொண்டேன் ...
அவனிடம் பேசி ஜெயிக்க ! என்னை மாதிரி அப்பிராணிகளால்  முடியவே முடியாது.. அதனால் அந்த டாபிக்-ஐ அப்படியே விட்டு விட ..

பிறிதொரு நாளில், அவனிடம் பயந்து கொண்டே ! ஏன்டா ராஜா உனக்கும் 30 நெருங்க போகுது ,,, கல்யாணம் கில்யாணம் என கேட்டு முடிக்கும் முன்னே ! திரும்பி முறைத்தான்.... என்கிட்ட நெருங்கி வந்தவன் ! " நான் 30 வயசுல தான் ஒரு பொண்ணு கூட படுக்கணும்னு  யாருடா சொன்னது " ஏன் அதுக்கு முன்னாலயும், அப்புறமும் என்னால முடியாதா என்றான்,,, 

அவன் "முடியாதா " என்று கேட்டதன் அர்த்தம் புரிந்தது ! திரும்பி என்ன பேசினாலும் சொன்னாலும் எரிந்து விழுவான் ! அதனால் மௌனமாய் இருந்து விட்டேன் ...

நாட்கள் கடந்தன! இன்று இந்த சந்தோஷமான விஷயத்தை முதலில் ராஜாவிடம் சொல்ல வேண்டும் ! என முடிவு கட்டி கொண்டேன் !

அன்று என்னமோ ரொம்ப சோகமாகவே இருந்தான் ராஜா. வந்தவன் என்னை கொஞ்சமும் சட்டை செய்யாமல் ,சுவற்றை வெறித்து பார்த்தபடியே உட்கார்ந்திருந்தான் !!!!
 இந்த மாதிரி அவன் UPSET -ஆக இருந்து நான் பார்த்ததே இல்லை !  என்ன என்று கேட்கலாம் என்றால் , அதற்கும் எரிந்து விழுவான் ! 

கொஞ்சம் தட்டு தடுமாறி  , 
"ராஜா உன்னிடம் நான் ஒண்ணு சொல்லணும் ! திட்டமாட்டியே  என்றேன்!
"சுவற்றை பார்த்தவாறு !  சொல்"  என தலையசைத்தான்  ! 

"அன்னிக்கி சொன்னேனே அந்த ஸ்ரீரங்கம் பொண்ணு ! அது பிக்ஸ் ஆயிடுச்சு ! அம்மா !  காலையில் தான் போன் பண்ணி சொன்னாங்க ! அடுத்த வாரம் நிச்சயமாம் "  என்றேன்! என்ன சொல்வானோ என பயந்து கொண்டே !
கொஞ்சம் நேரம் ஏதும் பதில் பேசாதவன் ! நானும் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் என பீடிகையுடன் ஆரம்பித்தான் ! 
"நான் இங்கு வந்த வேலை ! முடிஞ்சுடுச்சு ஷங்கர்  ! கிளம்புறேன் "
"அதான் உன்கிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன் "என்றான்.
 எனக்கு உலகமே ஒருமுறை நின்று சுழல்வது போது இருந்தது !
அசோக் ,, நித்தி, தியாகு போன்ற எத்தனையோ நண்பர்கள் , இங்கு  6 மாதம் , 
1 வருடம் என ப்ராஜெக்ட் க்கு வந்து சென்று இருக்கிறார்கள் .. இது அந்த மாதிரிதான் இருக்கும் என்றாலும் , ராஜாவை பிரிகிறோம் என்று நினைக்கும் போது !  அவனது பிரிவை தடுக்க முடியாது என்பது தெரிந்தாலும்! இயலாமை மேலிட , இல்லை ராஜா நீ போக கூடாது என கத்த ஆரம்பித்தேன்..

திடீரென, என் அறை கதவை திறந்த, பக்கத்து அறை நண்பர் சந்தோஷ்,
" என்னாச்சு  ஷங்கர் , ANY   PROBLEM ,  யார் கூட பேசிட்டு இருக்கீங்க " என்றார் .

அவரின் திடீர் வருகையை சற்றும் எதிர்பாராத நான் , தட்டு தடுமாறி , திக்கி திணறி ......

.....ரா....ரா ..ஜா......!!!!!!!!!!   என்றேன்,...

என்னை ஒரு மாதிரியும் ,,,, என் ஒரு அறையை சுற்றும் முற்றும் பார்த்தவர் , நிலைமை உணர்ந்தவராய் ,
"அதெல்லாம் உங்களை தவிர இங்க யாருமில்ல" ," பாருங்க ! மணி நைட் 1   ஆகுது !  லைட் ஆப் பண்ணிட்டு தூங்குங்க "என்றவர்!
என்னை படுக்க வைத்து விட்டு , லைட் ஆப் பண்ணி விட்டு சென்றார்...

ஆனால், படுக்கையின் மறுமுனையில் அமர்ந்திருந்த ராஜா ,சுவற்றை வெறித்து பார்த்தவாறு  இன்னமும்  பேசி கொண்டே இருந்தான்....

25 comments:

  1. Good self advertisement da and good script writing techniques.I enjoyed it.

    ReplyDelete
  2. thanks Da Kathir,,,,,,,,,,,,

    ReplyDelete
  3. எனக்கு தெரிந்த ஷங்கரிடம் இவ்வளவு ஆழ்ந்த சிந்தனை மற்றும் கதை எழுதும் ஆற்றல் இருக்கின்றது என்பது என்ற உண்மை ஆச்சரியமானது. ரவாண்டா மாதிரி தொலை தூர நாடுகளுக்குச் சென்றால் தமிழோடு ஒட்டி உறவாடும் கலை தானாகவே மேம்பட்டு விடுமோ?

    ReplyDelete
  4. Good narration....

    "ஆற்றில் விழும் இலை மாதிரி...வாழ்க்கையை கால ஓட்டத்தின் போக்குக்கு விட்டுவிடுபவன்". "கிட்டதட்ட சிவப்பு சிந்தனை காரன்... (அதாங்க கம்யூனிஸ்ட்)" ... Very nice analogy.

    I think every one is their one KING when taking decision, here "RAJA" name fit to the rhetorical analogy. We check the opinion with every one final decision is ours... At least Shankar in and me.

    When a decision is forced to us, we have options to blame someone and slip from our life Goals. So being a KING on our decision is GOLDEN. Shankar has defined it very well. Please continue writing... why don't you make video blogs than readable ones, it would be easier for lazy people like me. Please continue sharing your literature.

    BTW, KING is trump card in life, not the JOKER!

    ReplyDelete
  5. @ BALAJI , இந்த பதிவை (கதையை ) என் கோணத்திலேயே அணுகிய உங்களின் , ரசிப்பு திறனை என்னவென்று சொல்வது ,,,,,
    நம்மோட பாஸ்(கிங்) , நம்ம நம்பிக்கைதான் ,, அதை SPILIT PERSONALITY முறையில் கதையாக எழுத முயற்சித்திருக்கிறேன்...
    இந்த பதிவில் சொல்லபட்ட அனைத்தும் உண்மை நிகழ்வுகளே ... அதிக பட்சமாக கண்ணாடி பார்த்து பேசும் பழக்கம் எத்தனை பேருக்கு இருக்கும் என தெரியாது,,, தோல்வியில் சோர்ந்து போகும் போது , நமக்குள் ஒரு குரல் கேட்கும் ,,,, அந்த POSITIVE சிந்தனை மனசாட்சி தான் எப்போதும் நம்முடைய ராஜா..

    ReplyDelete
  6. @ GOVIND SIR , Im really happy to see your comments... Thank you So Much ,...நேரம் கிடைக்கும் போது எழுதலாம் என்று ... இப்படி ஒரு சின்ன முயற்சி ... சார்

    ReplyDelete
  7. SURVIVAL என்ற கால்பந்து வீரன் , ஷங்கர் என்ற இந்த பந்தை , வேலை என்ற கோல் போஸ்ட்டை நோக்கி உதைக்க , பறந்து வந்து சென்னை என்ற கிரௌண்ட்-ல் விழுந்தேன்...

    great shankar.... super

    ReplyDelete
  8. @SARAN , அப்படியா சரவணன் எல்லாம் நீங்க கொடுத்த உற்சாகம் தான் ! என்னோட ஒரே நிரந்தர விமர்சகர் நீங்கதான்

    ReplyDelete
  9. Rajagopal, Kampala : Hats-off for writing so well Shankar! Flow is good. Narration is quite absorbing, and the twist at the end [ though expected ] is interesting! I could see bit of Sujatha's influence in style [ I'm a great fan of Sujatha btw]. Keep writing. [ Aamaam, En 'Kalyanatthu' mela onakku oru kolai veri!?]

    ReplyDelete
  10. Beautiful Mind - Russel Crowe-வின் வாசனை ஆங்காங்கே அடித்தாலும், உன் பிரத்யேகமான, அசரடிக்கும், எழுத்து நடை எல்லாவற்றையும் எளிதாகத் தாண்டிச்செல்கிறது.
    ஒரு நல்ல சிறுகதைக்கான எல்லா இலக்கணமும், இதில் சரியாகப் பொருந்தியிருப்பதாக தெரிகிறது. ஆரம்பித்ததில் இருந்து, முடிவு வரை, ஸ்க்ரீனை விட்டு கண்களை விலக்க முடியாத
    வசீகரம் நன்றாகக் கூடி வந்திருக்கிறது.

    நீ சொல்லும் அந்த ராஜா, நம் எல்லாருக்குள்ளும் இருக்கிறான். ஆனால் அவன் வேலை, நமக்குத் திருமணம் ஆனவுடன் முடிந்துவிடுவதில்லை. என்ன ஒன்று..... திருமணத்துக்குப் பிறகு,
    அவனால் அடிக்கடி வந்து செல்ல முடியாது. அவ்வளவே. ஆனால் இப்படிப்பட்ட ஒருவனை சிறிதும் அறிந்து கொள்ளாமல் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் வேறு வகை.

    வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் எழுந்த பிரச்சனைகளை, நானும் என் “ராஜா:”வின் சொல் கேட்டதால் சமாளித்து வென்றிருக்கிறேன்.

    \\ ஒருவேளை இந்த பூமி திடீர்ன்னு விழுந்தா!! எங்கடா போய் விழும் ... என்றான் ,..\\

    ஓஹோ... இந்த செந்தில் (கவுண்டமணி) டைப் கேள்வி எல்லாம், அந்த “ராஜா” சொல்லிக்கொடுத்து தான் எங்ககிட்ட கேட்கப்பட்டதா? அடப்பாவி ராஜா...! நாங்க உனக்கு என்னடாப்பா துரோகம் செஞ்சோம்? ஏன் இந்தக் கொலை வெறி..?

    \\எனக்கும் , இவனுக்கும் ஒரே வயதுதான் ஆகிறது ,,,, பிறந்தது கூட ,. ஒரே வருடம் , ஒரே மாதம்... அப்படியிருக்க இவன் சிந்தனைகள் மட்டும் ஏன் இவ்ளோ முதிர்ச்சியாய் என பல தடவை ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்... \\

    ஆனாலும் உனக்கு இவ்வளவு தற்புகழ்ச்சி ஆகாது.... :) :) :)

    குழந்தைத்தனமும், முதிர்ச்சியும் சரிபங்காய் இருப்பதால்தானே நம்மால் இங்கே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்க முடிகிறது !

    இன்னும் பல முகடுகளை எட்டிப்பிடிக்க வாழ்த்துகள்..


    - சுந்தர்.

    ReplyDelete
  11. KATHIRESAN R.S9 May 2011 at 08:36

    Dear Shankar,

    I have read the last three blogs of yours and I have left my comment for the last one (" The Dosa ")

    I especially like the way you narrate things, the way you add humour to incidents one in reality is really tough.

    Keep up the good work my friend, yes I do read your blogs as and when I see mail from thambi's Screens :)

    The last one what you have written was real good, First congrats that you are getting married soon, Welcome to the club :-D

    Also, I am speechless when I came to know that you have faced with loads of hard time in your early days after college and the way you faced them courage. The entire world is like that no one wants others to get name, fame or grow richer or getting a significant notice in the office or at the society, we are surrounded by hypocrites who wears masks and play with our emotions. Be tough.
    Always remember the fact " When the going get tough, the tough get going".

    and I expect more such nice postings from Thambi Screens. Keep blogging and rocking.

    urs,
    Kathir R.S.

    ReplyDelete
  12. Your posts are good...

    You are rocking...

    Regards,
    Lakshmana Kumar A

    ReplyDelete
  13. good narration.
    Keep writing.
    One time you should publish everything as a book.

    ReplyDelete
  14. wow wow.... Really very nice. The 2 stories about the destiny was perfectly matched with the situation... Really Nice Shankar...

    ReplyDelete
  15. Shankar Really very nice

    "கல்யாணம்கிற பேர்ல எப்படிடா ஷங்கர் , முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணு கூட படுக்க ரெடி ஆயுடுறீங்க .."

    Vera vali illai onnthan paduthu agaanum

    But

    Thosai kantippaka kidaikkum

    Ponraj

    ReplyDelete
  16. தாமதத்திற்கு வருந்துகிறேன். படைப்பை மிகவும் ரசித்தேன் என்ற போதிலும் உன்னை தெரிந்தவன் என்பதால் இந்த கதை எனக்கு புதிதல்ல. இந்த கதைகளை நிறைய முறை ரசித்து கேட்டிருக்கிறேன்; ராஜா என்று பெயரிடபடுவதற்கு முன்னரே. எத்தனையோ ராஜாக்களின் உந்துதல்களில் தான் உலகின் எல்லா சரித்திரங்களும் எழுதப்படுகிறது. விரைவில் உன்னுடையதும்!

    நாம் நம்மில் நம்பிக்கை இழக்கும் தருணங்களில் தலையில் அடித்து இழுத்து செல்கிறார்கள் இந்த ராஜாக்கள். இதை படித்ததும் என் கதையையும் சில பக்கங்கள் புரட்டினேன் .. உனக்கு சௌகார்பேட்டைகாரன் எனக்கு ஒரத்தநாட்டில் ஒருவன், உனக்கு marina beach எனக்கு ஒரு மசூதி! ஏதோ ஓரிடம் ! ஆனாலும் நாம் ராஜாக்களை சந்திக்க தவறுவதில்லை!

    \\எனக்கும் , இவனுக்கும் ஒரே வயதுதான் ஆகிறது ,,,, பிறந்தது கூட ,. ஒரே வருடம் , ஒரே மாதம்... அப்படியிருக்க இவன் சிந்தனைகள் மட்டும் ஏன் இவ்ளோ முதிர்ச்சியாய் என பல தடவை ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்... \\

    இந்த இடத்தில் உன் ராஜாவின் அடையாளங்களை விட்டிருக்கிறாய்! இருப்பினும் இரண்டாவது முறை வாசிக்கும்பொழுதுதான் என் சிற்றவிற்கு எட்டியது.

    உன் ராஜாவின் கதைகள் எல்லாம் அருமை.. என் ராஜாவுக்கும் இந்த கதைகளை அனுப்பிவைத்தாகிவிட்டது .. தக்க வேளையில் நினைவுகூர்வது அவன் பாடு.

    இன்னும் நிறைய எழுதி எங்கள் மூளையில் அப்பப்போ வந்து குதித்து விளையாடு!

    ReplyDelete
  17. Lakshmi kanth9 May 2011 at 20:26

    padichenda..

    really superb...

    hei script writer ku undana athanai talent m irukuda...keep on writing...

    ipo nan pakura shankar total la different aa irukkan.

    congratulations da.

    Best Regards,
    Lakshmikanth.

    ReplyDelete
  18. @ ராஜகோபால் அண்ணன் , சுஜாதாவின் பாதிப்பில்லாமல் , தமிழில் இனி ஒரு ஜனரஞ்சக எழுத்தாளன் பிறக்கவே முடியாது... அவரின் சாயல் என்று நீங்கள் சொன்னதையே என் பிறவி பலனாக நினைக்கிறேன் ... நான் முதன் முதலில் எழுதிய சின்ன பதிவே சுஜாதாவிற்கான என் இரங்கல் தான் .... அவரின் மறைவு என்னை மிகவும் பாதித்தது மிக உண்மை.. அதன் பாதிப்பில் ,நான் அவருக்கு எழுதிய இரங்கலை படித்து பார்த்த செந்தில்கணேஷ் , மிகவும் நன்றாக எழுதி இருப்பதாக பாராட்டினான்..செந்தில்கணேஷ்-ன் தூண்டுதலும் முயற்சியும் தான் , இப்பொழுது நான் ப்ளாக் வரை வந்திருப்பது...கண்டிப்பாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ,என் சிந்தனைகளை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வேன் .
    எப்பொழுதும் உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கும்

    ReplyDelete
  19. @சுந்தர் , நன்றி ....மேற்குறிப்பிட்ட பதிவில் , ராஜா இன்னமும் கட்டிலில் மறுமுனையில் அமர்ந்திருக்கிறான் ... செல்லவில்லை...:)
    காரணம் , ராஜா உதவி இல்லைஎன்றால் இந்த ப்ளாக்-ஐ என்னால் தொடர முடியாது... ஆக்சிஜனை உள்ளிழுத்து .. கார்பன் டை ஆக்சைடை வெளியிடும் process என் உடலில் நடக்கும்வரை ராஜா என்னுடம் இருப்பான் என்றே தோணுகிறது.... அப்புறம் தற்புகழ்ச்சி எல்லாம் ஒன்றுமில்லை ,,,, கதையை படிப்பவர்களை சற்று குழப்பும் முயற்சி அவ்ளோதான்,,,,

    பின் குறிப்பு : அதிகமாக ஆங்கில படம் பார்ப்பதை தவிர்க்கவும்... அப்புறம் நாங்க எப்படி ப்ளாக் எழுதுறது... :)

    ReplyDelete
  20. @ R.S.Kathir, Thanks for your detailed comment ...

    ReplyDelete
  21. @Lakshman , Ponraj , Arul , Thank you so much spending time to read my blog...

    ReplyDelete
  22. @செந்தில்கணேஷ் , ஒவ்வொரு முறையும் பதிவு எழுதும்போது , உன்னையும் சுந்தரையும் திருப்தி படுத்துவதே எனக்கு தலையாய பிரச்சினையாக இருக்கிறது,,, என்னை பற்றி அதிக பட்சமாக தெரிந்த உங்கள் இருவரையும் , என்னால் முடிந்த மட்டில் குழப்பி இருக்கிறேன்....

    ReplyDelete
  23. Thanks Da Lakshmi ... Sure ,I will write whenever am free,,,,

    ReplyDelete
  24. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

    ReplyDelete